சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி : ஆந்திர முதல்–மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கிறார்
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 30–ந் தேதி முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடந்தது. அதில் தெலுங்குதேசம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது அந்த கூட்டணிக்கு சரியான போட்டியாக அமைந்தது ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் (வயது 46) ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.
அந்த தேர்தலில் மோடி அலையில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரச்சினையில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறியது.
இந்த நிலையில், அங்கு கடந்த முறை போலவே நாடாளுமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 11–ந் தேதி தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க சந்திரபாபு நாயுடு போராடினார். அதே நேரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சியைப் பிடிப்பதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு இடையே நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியும் போட்டியில் களத்தில் குதித்தது.
மொத்தத்தில் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவியது.
தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, ஜனசேனா தலைவர் நடிகர் பவன்கல்யாண் என மூன்று தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினர்.
இருப்பினும் அங்கு தெலுங்குதேசம் கட்சி பின்னடைவை சந்திக்கும் என தகவல்கள் வெளியாகின. கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். இது அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆந்திராவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பதற்கு 88 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணி வகிக்கத்தொடங்கினர்.
இறுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றியை அந்தக் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி கொண்டாடினர். அங்கு ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி முதல்–மந்திரி ஆகிறார்.
கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, புலிவேந்துலா தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அவர் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் சதீஷ் சிங்காரெட்டியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பறிகொடுத்தார். இருப்பினும் அவர் தனது குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2004–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தரப்பில் ராஜசேகர ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
இப்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்புகிறது. அதே சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, தனது தந்தை ராஜசேகர ரெட்டியைப் போன்று மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்தினார். மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
மொத்த இடங்கள் – 175
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – 149
தெலுங்குதேசம்– 25
ஜனசேனா–1
தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கருத்து தெரிவிக்கையில், ‘‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு அமோக வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி, மக்களின் வெற்றி. இது எதிர்பார்க்கப்பட்ட வெற்றி. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்து கொள்வேன்’’ என கூறினார். அவருக்கு தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.
ஆந்திர முதல்–மந்திரியாக ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, 30–ந் தேதி பதவி ஏற்பார் என அவரது கட்சி பொதுச்செயலாளர் உமரெட்டி வெங்கடேசுவரலு தெரிவித்தார். முன்னதாக அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 25–ந் தேதி கூடி, ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியை முதல்–மந்திரியாக தேர்வு செய்கின்றனர்.