கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 25 May 2019 11:33 AM GMT (Updated: 25 May 2019 11:33 AM GMT)

கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியானது வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.  ஆனால், இதில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஒட்டுமொத்த காங்கிரஸ் செயற்குழுவும் நிராகரித்தது.  இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

முன்னாள் ராணுவ மந்திரியான ஏ.கே. அந்தோணி கூறும்பொழுது, எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லையே தவிர பெரும் சரிவல்ல. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விரிவாக விவாதிப்போம்.  ராகுல் காந்தி இனி என்ன செய்வார் என்பதை நான் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.  கடுமையாக உழைத்த கட்சி தலைவர் ராகுலுக்கும் நன்றி.  தோல்விக்கு பொறுப்பேற்க ராகுல் காந்தி தயாராக இருந்தார்.  ஆனால் தோல்விக்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

Next Story