நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா?


நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா?
x
தினத்தந்தி 27 May 2019 12:15 AM GMT (Updated: 26 May 2019 9:52 PM GMT)

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தோல்வி அடைந்ததால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆட்சி கவிழுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக இருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த இரு கட்சிகளையும் விட எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா அதிக இடங்களை (104) பெற்றது.

பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. என்றாலும் கூட்டணி அரசு அமைந்தது முதலே இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இருந்து வருகின்றன.

இதனால் அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க அடிக்கடி பாரதீய ஜனதா ’ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை கையில் எடுத்தது. ஆனால் அதற்கு பலன் இல்லை.

இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்ட போது காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 4 பேருடன் மும்பைக்கு சென்று தங்கினார்.

அந்த சமயத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க் கள் 2 பேர், ஆதரவை திரும்ப பெற்றதால் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பை சென்று தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டதால், அவர்கள் அங்கிருந்து பெங்களூரு திரும்பி சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பாரதீய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு தலா ஒரு இடமே கிடைத்தது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சிஞ்சோலி, குந்துகோல் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிஞ்சோலி தொகுதியில் பாரதீய ஜனதாவும், குந்துகோலில் காங்கிரசும் வெற்றி பெற்றன.

இதனால் சட்டசபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்து உள்ளது. அதேசமயம் காங்கிரசின் பலம் (சபாநாயகர் உள்பட) 79 ஆக குறைந்துவிட்டது. ஜனதாதளம் (எஸ்) பலம் 37 ஆக உள்ளது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் சட்டசபையில் பாரதீய ஜனதாவின் பலம் 107 ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., தான் பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ரமேஷ் ஜார்கிகோளி மூலம் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் கமடள்ளி, சீமந்தபட்டீல், நாகேந்திரா, லிங்கேஷ், ஆனந்த்சிங், சிவராம் ஹெப்பால்கர், சுதாகர் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாராயணகவுடா ஆகியோரை தொடர்பு கொள்ள பாரதீய ஜனதா முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவில் சேரும் மனநிலையில் உள்ள அந்த எம்.எல்.ஏ.க்களை கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கவைப்பது தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி அங்கு சென்று வந்துள்ளார்.

இந்த ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பாரதீய ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாகவும், மத்தியில் புதிய அரசு அமைந்த ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கும்படி அக்கட்சியின் மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுதாகர், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினர். அப்போது பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது 2 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேருவது பற்றி அவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் மேலும் 10 எம்.எல்.ஏ.க்களும் பாரதீய ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கோவாவில் தங்க வைக்க பாரதீய ஜனதா தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் 30 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதோடு, அரசு கவிழும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story