பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை


பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை
x
தினத்தந்தி 30 May 2019 11:30 PM GMT (Updated: 30 May 2019 11:11 PM GMT)

பிரதமராக பதவியேற்பதற்கு முன் மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக காலையில் அவர் தேசத்தந்தை காந்தியடிகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதற்காக முதலில் டெல்லி ராஜ்காட் சென்ற அவர் அங்கு காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வாஜ்பாயின் நினைவிடமான சதிவ் அடலுக்கு சென்று, அங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர் வளையம் வைத்து, உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி பின்னர் தனது தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்த ஆண்டு பாவுவின் (காந்தி) 150-வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். காந்தியடிகளின் உன்னத கொள்கைகளை இந்த சிறப்பான தருணம் மேலும் பிரபலப்படுத்துவதுடன், ஏழைகள், அடித்தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை உயர்த்த நமக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.

மக்களுக்கு சேவை செய்வதற்கு பா.ஜனதாவுக்கு இதுபோன்ற ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்ததை வாஜ்பாய் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். அடல்ஜியின் வாழ்வு மற்றும் பணியின் உத்வேகத்தைக்கொண்டு நாங்கள் சிறந்த நிர்வாகத்தை வழங்கவும், மக்களின் வாழ்வை மாற்றுவதற்கும் போராடுவோம்.

பணியின் போது உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளின் துணிச்சலுக்காக இந்தியா பெருமைப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காக்கும் எந்த செயலையும் நாங்கள் மேற்கொள்ளாமல் விடமாட்டோம். நாட்டின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

Next Story