இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது” மு.க.ஸ்டாலின்


இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது”  மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Jun 2019 8:32 PM IST (Updated: 3 Jun 2019 8:32 PM IST)
t-max-icont-min-icon

இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த 31-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30-ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  

இந்த நிலையில்,  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை என்று குறிப்பிடப்பட்டு, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுவிருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம்,  தமிழகத்தில் 3-வது மொழியாக இந்தி மொழி பயில வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

தலைவர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது.  ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்! எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story