பயங்கரவாதி என ஐ.நா. அறிவித்த மசூத் அசாருக்கு ஆதரவாக காஷ்மீரில் போஸ்டர் ஏந்தி கல்வீச்சு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மசூத் அசாருக்கு ஆதரவாக சிலர் போஸ்டர்களை ஏந்தி பாதுகாப்பு படை மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர்,
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்களை குறிவைத்து புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா பல முறை முயற்சித்தும் சீனா முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே பிரான்ஸ் தலைமையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த முயற்சி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மே 1ந்தேதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேவேளையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜமியா மசூதி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது முகமூடி அணிந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் பயங்கரவாதி ஜகீர் மூசா மற்றும் ஐ.நா. அமைப்பினால் தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story