கதர் பொருட்களை உலகமயம் ஆக்குவோம்: ரூ.15 லட்சம் கோடி செலவில் நெடுஞ்சாலை திட்டங்கள் - நிதின் கட்காரி தகவல்


கதர் பொருட்களை உலகமயம் ஆக்குவோம்: ரூ.15 லட்சம் கோடி செலவில் நெடுஞ்சாலை திட்டங்கள் - நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:45 AM IST (Updated: 6 Jun 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், கதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.

புதுடெல்லி,

மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி அரசில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரியாக நிதின் கட்காரி பொறுப்பேற்றுள்ளார்.

தனது இலக்குகள் குறித்து அவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கட்சி அரசியல், சாதி, இன, வகுப்புவாத அரசியலை தாண்டி, மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். தங்களுக்கு வளர்ச்சிதான் தேவைப்படுகிறது என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர். எங்களுக்கும் அதுதான் முன்னுரிமை பணி ஆகும்.

பணமதிப்பு நீக்கம் மூலமாக, மோடி அரசு, ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரானது என்ற செய்தி பரப்பப்பட்டது. அனைத்து நலத்திட்டங்களாலும் மக்கள் பலன் பெற்றனர்.

நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும்.

20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். அவற்றை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

நான் 2014-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றபோது, 403 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை முடித்து விட்டதால், வங்கிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி பணம் மிச்சம் ஆகியுள்ளது. வீழ்ந்து கிடந்த நெடுஞ்சாலை துறையை நிமிர்த்தி உள்ளோம்.

நெடுஞ்சாலை பணிகளில், நாள் ஒன்றுக்கு 32 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை நாள் ஒன்றுக்கு 40 கி.மீ. ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

முந்தைய 5 ஆண்டுகளில், ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட ஊழலுக்கு இடம் தராமல் இவை செய்யப்பட்டுள்ளன. சுங்கச்சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த பாடுபட்டு வருகிறேன்.

கதர் பொருட்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை கூட்டு முயற்சியின் மூலம் உலகமயமாக்குவதே எனது இலக்கு. தேன் உற்பத்தியையும் பெரியஅளவில் செய்ய விரும்புகிறோம். முருங்கைக்கு உலக அளவில் கிராக்கி இருப்பதால், அதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

தேங்காய் நார் தொழிலை தரம் உயர்த்த விரும்புகிறோம். இந்த தொழில்கள் பெருமளவுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கவும் வழிவகுக்கும். இவ்வாறு நிதின் கட்காரி கூறியுள்ளார்.


Next Story