75 மாவட்ட ஆஸ்பத்திரிகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற திட்டம் - மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை


75 மாவட்ட ஆஸ்பத்திரிகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற திட்டம் - மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2019 2:21 AM IST (Updated: 10 Jun 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 3-வது கட்டமாக 75 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

புதுடெல்லி,

சுகாதாரத்துறையில் குறைவாக உள்ள மனிதவளத்தை நிறைவு செய்வதற்காக மத்திய அரசு நிதி உதவியுடன் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 58 மாவட்ட ஆஸ்பத்திரிகளும், 2-வது கட்டமாக 24 மாவட்ட ஆஸ்பத்திரிகளும் தேர்வு செய்யப்பட்டன.

இவற்றில் இதுவரை 39 மாவட்ட ஆஸ்பத்திரிகள் மருத்துவ கல்லூரிகளாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மற்றவைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது 3-வது கட்டமாக 75 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.325 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒப்புதலுக்காக செலவுக்கான நிதி கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிதி கமிட்டி ஒப்புதல் அளித்ததும் இந்த திட்டம் மத்திய மந்திரிசபைக்கு அனுப்பப்படும். மந்திரிசபையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுப்பதற்கான வரைவு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் இந்த மருத்துவ கல்லூரிகளை அமைக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.


Next Story