மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா?


மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா?
x
தினத்தந்தி 14 Jun 2019 9:32 PM GMT (Updated: 14 Jun 2019 9:32 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பரக்பூர்,

மேற்கு வங்காளத்தில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே அரசியல்ரீதியான மோதல் நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்த மோதல் அதிகரித்தது. பல ஊர்களில் கொலைகளும் நடந்தன.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் கொலைகள் நடந்து வருகின்றன. மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் அழைத்து பேசினார். வன்முறை அகல உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மறுநாளிலேயே மேற்கு வங்காளத்தில் மீண்டும் அரசியல் படுகொலை நடந்து விட்டது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டோகிபூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி தாஸ் (வயது 42). இவர், பா.ஜனதா பெண் பிரமுகர்.

நேற்று தனது வீட்டில் இருந்தார். அவருடைய கணவரும் பா.ஜனதாவில் உள்ளார். மார்க்கெட்டுக்கு சென்றிருந்த கணவர், வீடு திரும்பியபோது, சரஸ்வதி தாஸ், உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தநிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சரஸ்வதி தாஸ் உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் இருந்து வந்ததாக கணவர் தெரிவித்தார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்த கொலையை செய்திருப்பதாக உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் குற்றம் சாட்டினார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதை மறுத்துள்ளது.


Next Story