விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு: இனி விபத்துக்கள் நேராமல் உறுதி செய்வோம் - விமானப்படை தளபதி தனோவா பேட்டி


விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு: இனி விபத்துக்கள் நேராமல் உறுதி செய்வோம் - விமானப்படை தளபதி தனோவா பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2019 10:25 PM GMT (Updated: 15 Jun 2019 10:25 PM GMT)

அருணாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் அதை ஆய்வு செய்து இனி விபத்துக்கள் நேராமல் உறுதி செய்வோம் என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.

ஐதராபாத்,

அசாம் மாநிலம், ஜோர்கட் விமானப்படை நிலையத்தில் இருந்து அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளம் நோக்கி கடந்த 3-ந் தேதி மதியம் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் மாயமானது.

அதில் பயணம் செய்த 13 பேர் கதி என்ன ஆனது என தெரியாமல் பதற்றம் ஏற்பட்டது. மாயமான விமானத்தை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

8 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர், கடந்த 11-ந் தேதி அந்த விமானம், அருணாசல பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தின் லிபோ கிராமத்தில் இருந்து 16 கி.மீ. வடக்கே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 13 பேரும் பரிதாபமாக பலியானது உறுதியானது.

இந்த நிலையில் ஐதராபாத் அருகே துண்டிக்கல் என்ற இடத்தில் உள்ள விமானப்படை பயிற்சி கல்லூரியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, நிகழ்ச்சியின் இடையே நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, ஒலிப்பதிவு கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்வோம். அதில் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் உறுதி செய்வோம்.

அருணாசலபிரதேசத்தை பொறுத்தமட்டில், அந்த பகுதி மேகத்திரள் நிறைந்தது.

அந்த நிலப்பரப்பில் மேகத்திரளுக்கு இடையே விமானத்தில் பறந்தபோது அந்த பருவ நிலையில், இந்திய விமானப்படை விமானம் மட்டுமல்ல, பல விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story