மேகதாது, காவிரி நீர் பங்கீடு பிரச்சினை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் மத்திய நீர்வள மந்திரியுடன் சந்திப்பு


மேகதாது, காவிரி நீர் பங்கீடு பிரச்சினை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் மத்திய நீர்வள மந்திரியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:01 AM IST (Updated: 16 Jun 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை பிரச்சினை மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் மத்திய நீர்வள மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி,

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முதல்-மந்திரிகள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழகத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

இந்த சந்திப்பின்போது மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பங்கீடு, காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்ட முயற்சிப்பது போன்ற பிரச்சினைகள் உள்ளது. இதுதொடர்பாக இரு மாநில முதல்வர்களும் மத்திய நீர்வள மந்திரியை சந்தித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய நீர்வள மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார். மேலும் காவிரி நதிநீர் பங்கீடு, நதிகள் இணைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலேயே மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு அவசரமாக தேவைப்படும் நிதி தொடர்பான கோரிக்கையை வழங்கினார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரியை அவருடைய இல்லத்தில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.


Next Story