5-வது நாளாக கொட்டி தீர்த்தது: மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை - ஒரே நாள் இரவில் 34 பேர் பலி


5-வது நாளாக கொட்டி தீர்த்தது: மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை - ஒரே நாள் இரவில் 34 பேர் பலி
x
தினத்தந்தி 3 July 2019 12:00 AM GMT (Updated: 2 July 2019 8:56 PM GMT)

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. ஒரே நாள் இரவில் மும்பை மற்றும் புனேயில் 34 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையை பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கி யது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது.

மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29-ந்தேதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.

இந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.

மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மலையையொட்டி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் எல்லையை வரையறுக்கும் வகையில் பெரிய தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது.

அதையொட்டி வசித்து வந்த குடியிருப்புவாசிகளுக்கு அந்த தடுப்பு சுவர் எமனாக மாறிவிட்டது. குடிசைவாசிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

அடை மழை காரணமாக, மலை தடுப்புச்சுவர் திடீரென இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.

கொட்டும் மழையில் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 பேர் பிணமாக மீட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர்.

மும்பை மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு கார் செல்ல முயன்றது. அப்போது மழை வெள்ளம் காரை இழுத்து சென்றது.

இதில் துரதிருஷ்டவசமாக கார் வெள்ளத்தில் மூழ்கியது. காரில் இருந்த 2 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே உயிரோடு சமாதி ஆனார்கள்.

தானே மாவட்டம் கல்யாணில் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள தேசிய உருது பள்ளி சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

ஒரே இரவில் மழைக்கு 34 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள்.


Next Story