மத்திய பட்ஜெட்டில் பரம்பரை வரி மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம்?
பெரும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் பரம்பரை வரி அல்லது எஸ்டேட் வரியை அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி
இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில் 77.4 சதவீத சொத்து 10 சதவீத இந்தியர்கள் கையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு என்பது வெறும் 4.7 சதவீதம் மட்டுமே.
உலக மயமாக்கலுக்கு பிறகு பணக்காரர்கள் அதிக வருவாய் ஈட்டும் சூழ்நிலையும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் சூழ்நிலையும் நிலவுகிறது. இதனால் முன்னேறிய நாடுகளில் பரம்பரை வரி (inheritance tax) அல்லது எஸ்டேட் வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த வரி இருந்து வருகிறது. அமெரிக்காவில் 11 மில்லியன் டாலர் வரம்புக்கு மேல் இருக்கும் சொத்துக்கு 40% வரி செலுத்த வேண்டும். ஜப்பானில் 55% தென்கொரியாவில் 40% என்ற அளவில் சொத்துக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
இந்தியாவிலும் எஸ்டேட் வரி அல்லது பரம்பரை வரி என்பது கடந்த 1985-ம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு இந்த வரி ரத்து செய்யப்பட்டு விட்டது. அந்த காலக்கூட்டத்தில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சொற்பமான அளவில் இருந்ததால் இந்த வரி வசூலாவதும் குறைவாகவே இருந்தது. இதனால் அந்த வரி ஒழிக்கப்பட்டது.
இதன்படி, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சொத்து வைத்திருப்போர் மறைவுக்குப் பிறகு வாரிசுதாரர்கள் பெறும் சொத்துக்கு வரி செலுத்த வேண்டும். தற்போது வருமான வரி செலுத்திய தனிநபர் தனது ஆயுளுக்குப் பின், தான் ஆண்டு அனுபவித்ததுபோக மீதமுள்ள சொத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கும் போது அந்த சொத்து ஒரு அளவுக்கு அதிகமாக இருந்தால் அதற்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும்.
இந்த வரி அதிக சொத்து உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மேலும் ஒன்றுபட்ட இந்திய குடும்பங்களுக்கும் வரி விதிக்க முடியும். அதிகமான பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஏற்கெனவே செல்வ வரி (wealth tax ) வசூலிக்கப்பட்டு வந்தது. இது 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக வருமான வரியிலேயே கூடுதல் சொத்து இருப்பவர்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.
இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் பரம்பரை வரி மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story