சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை-கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறையின் என்ஜினீயர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கே ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சகதி நீர் எடுத்து வரப்பட்டு அதிகாரியின் மீது ஊற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரியை அவர்கள் பாலத்தில் கட்டிவைக்கவும் முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. நிதிஷ் ரானே முன்னாள் மராட்டிய முதல்வர் நாராயண் ரானேவின் மகன் ஆவார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் வர்கியாவின் மகனும், அதே கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜய் வர்கியாவும் தாக்கிய விவகாரம் சமீபத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வால் நடந்துள்ளது.
இதனையடுத்து மராட்டிய மாநில போலீஸ், நிதிஷ் ரானே மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 40க்கும் அதிகமானோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதிஷ் ரானேவை கைது செய்துள்ளனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Related Tags :
Next Story