சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..!
சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..! அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் ஆவணங்களை எடுத்துச் சென்றார்.
புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்தார்.
2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள் சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் இந்த முறை சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..! அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் ஆவணங்களை எடுத்து சென்றார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார் தெரியுமா..?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் நிதி மந்திரி பதவியை ஏற்றுள்ள 2–வது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
மத்தியில் புதிய மந்திரி சபையில் நிதித்துறை இலாகாவை பெற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், அந்த துறையை நிர்வகிக்கும் 6–வது தமிழர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் அந்த பொறுப்பை வகித்து உள்ளனர்.
1959-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ல் மதுரையில் பிறந்தார் நிர்மலா சீதாராமன். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் சிறுவயதிலேயே பல ஊர்களுக்கும் சென்று பழக்கமானவர். அடிக்கடி தந்தை பணிமாறுதல் ஆனதால் விழுப்புரம், சென்னை, திருச்சி எனப் பல இடங்களில் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்துள்ளார் நிர்மலா. தனது பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முடித்த அவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப்பட்டத்தை முடித்தார்.
இவர் பரகலா பிரபாகரை ஜேஎன்யூவில்தான் முதன்முதலாக சந்தித்தார். பரகலா பிராபகர் ஆந்திராவைச் சேர்ந்தவர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார் நிர்மலா. அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா சீதாராமன் பாஜகவின் முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவர் கணவரின் குடும்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது. அவரின் மாமனார் பரகலா சேஷாவதரம் காங்கிரஸின் அமைச்சராக இருந்தவர். அவரின் மாமியார் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். குடும்பமே காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி இயங்கியபோது நிர்மலா சீதாராமன் பாஜகவுக்குள் நுழைந்தது எப்படி? அதற்கு காரணமானவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ்தான்.
தனது திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் லண்டனில் தங்கிய நிர்மலா மீண்டும் 1991-ல் இந்தியா திரும்பினார். 2003-2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றினார். அப்போது 1999-2004 வரையிலான பாஜக ஆட்சி. பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றியதால் சுஷ்மா சுவராஜூடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாகவே 2006-ம் ஆண்டு பாஜகவில் இவர் இணைந்தார்.
4 ஆண்டுகள் பாஜகவில் பணியாற்றிய அவருக்கு 2010-ம் ஆண்டு முதல் பதவியை கொடுத்தது பாஜக. அதன்படி பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் நாட்டின் பல பகுதிகளுக்கும் பறந்த நிர்மலா குஜராத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி பம்பரமாய் சுழன்றார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியா? மோடியா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது மோடிக்காக அழுத்தமான குரலை பதிவு செய்தவர் நிர்மலா. பின்னர் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின் மோடிக்காக தீவிர பிரசாரத்தில் இவர் ஈடுபட்டார். அவரின் குரல் நாடு முழுவதும் பதிவாகியது. இதற்கிடையேதான் கட்சிக்குள் வர காரணமான சுஷ்மாவுடன் நிர்மலாவுக்கு கருத்து மோதல் கிளம்பியது. அதற்கு காரணம் தெலுங்கானாவின் தனிமாநில கோரிக்கை. இந்தக் கருத்து மோதல்களை பாஜக சரியாக கையாண்டு அதனை நீர்த்துப்போகச் செய்தது.
பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு குரல், மோடிக்கு ஆதரவான தீவிர பிரசாரம் என நிர்மலாவின் பங்கு பிரதமர் மோடி விவகாரத்தில் அதிகம். பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது எம்பியாக கூட இல்லாத நிர்மலா சீதாராமனை தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமித்தது மோடி அரசு.
அந்த நேரத்தில் ஆந்திராவில் பாஜக எம்பியாக இருந்த நெடுறமல்லி ஜனார்த்தன் காலமானார். அந்தக் காலியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டார் நிர்மலா. பின்னர் ஆந்திராவில் இருந்து அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். பின்னர் 2017-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறையை வழங்கியது மோடி அரசு. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு நேர பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன்.
2006-ல் கட்சிக்குள் நுழைந்து 13 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ள நிர்மலா சீதாராமன். தற்போது நிதி அமைச்சராக நியமிக்கபட்டு உள்ளார். மத்திய அரசில் தனக்கு முன் உள்ள சவால்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதில்தான் நிர்மலா சீதாராமனின் சாமர்த்தியம் உள்ளது.
Related Tags :
Next Story