பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடலை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்


பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடலை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 July 2019 1:13 PM IST (Updated: 6 July 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கியமான புறநானூற்று பாடலை உதாரணமாக குறிப்பிட்டு அசத்தினார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, வரி செலுத்துகிறவர்கள் பொறுப்புமிக்க குடிமக்களாக உள்ளனர் என கூறி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவர்களது மதிப்புமிக்க பங்களிப்பினால்தான் அரசாங்கம் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கனவை நிறைவேற்றும் வகையில் பணியாற்ற முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

புற நானூற்று பாடல்


இதுபற்றி குறிப்பிடுகையில் அவர் பிசிராந்தையார் மன்னர் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுரையாக கூறிய ‘யானை புகுந்த நிலம்’ பாடலின் சில வரிகளை குறிப்பிட்டார். அதை அவர் தமிழில் கூறினார்.

’’காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போல

தானும் உண்ணான், உலகமும் கெடுமே’’ என கூறினார்.

அதற்கான பொருளை ஆங்கிலத்தில் கூறினார்.

வயலின் ஒரு பகுதியில் விளைந்த நெல்லை அரிசியாக்கி சில சோற்றுக்கவளங்களை கொடுத்தால் போதுமானது. ஆனால் அந்த யானையே வயலுக்குள் புகுந்து மேய தொடங்கினால் என்ன ஆகும்? யானை தின்னும் கதிர்களின் அளவை விடு அதன் கால்கள் பட்டு வீணாகும் நெல்கதிர்களே அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இதை அவர் கூறிய போது தமிழக எம்.பி.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

அறிவுரை

இந்த பாடலில் மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் கூறிய அறிவுரை, யானை வயலில் புகுந்து நெற்கதிர்களை வீணாக்குவதுபோல மக்கள் மீது வரியை திணித்து குடிமக்களை கசக்கிப்பிழிந்து வரி வசூல் செய்ய மன்னன் முற்பட்டால் யானை புகுந்த வயல்போல அவனுக்கும் பலன் தராமல், மக்களும் பயன்பெறாமல் சீர்கெடும் என்பதாகும்.
1 More update

Next Story