காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி


காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி
x
தினத்தந்தி 7 July 2019 5:00 AM IST (Updated: 7 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து உள்ளனர். அவர்களில் 11 பேர் நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரது ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதைப் பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா காய்களை நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.

இந்தநிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து, இதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர்.

பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர்.

கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத் நிருபர்களிடம் கூறுகையில், ராமலிங்கரெட்டி, அவரது மகள் சவுமியா ரெட்டி, ஆனந்த் சிங் உள்பட மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள் பெங்களூருவில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ் மேலிடத்திற்கும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அவசர அவசரமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார்.

225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 உறுப்பினர்களின் ஆதரவை கொண்டிருந்த ஆளும் கூட்டணியில், 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் பலம் 106 ஆக குறைகிறது.

14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபையில் உறுப்பினர்களின் பலம் (சபாநாயகர் மற்றும் நியமன உறுப்பினர் உள்பட) மொத்தம் 211 ஆக குறைந்து விடும்.

அந்த சமயத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், நியமன உறுப்பினர் என மொத்தம் 107 பேரின் ஆதரவு கூட்டணி ஆட்சிக்கு கிடைக்கும். இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஒரு வேளை மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்காவில் உள்ளார். அவர் அமெரிக்காவுக்கு சென்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவுக்கு திரும்புகிறார்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் தேவகவுடாவிடம் கருத்து கேட்டபோது அவர், “பந்து தற்போது சபாநாயகரின் கையில் உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை உங்களைப்போல நானும் பார்க்க தயாராக உள்ளேன்” என்று முடித்துக் கொண்டார்.

பாரதீய ஜனதா கட்சித்தலைவர் எடியூரப்பாவிடம் கருத்து கேட்டபோது அவர், “என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம்” என கூறினார்.

வருகிற 12-ந்தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story