கர்நாடக கூட்டணி அரசுக்கு பின்னடைவு : இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது பாஜக
கர்நாடக கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு உண்டாகியுள்ளது. இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
பெங்களூரு,
கர்நாடக அரசியலில் கடந்த 8 நாட்களாக பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இதனால் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு ஆட்டம் கண்டு வருகிறது.
அதாவது கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சங்கர், நாகேஷ் ஆகியோர் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசின் பலம் 102 ஆக குறைந்துள்ளது. அதாவது சபாநாயகர், நியமன உறுப்பினரை தவிர்த்து கூட்டணி அரசின் பலம் 100 ஆகும்.
ஆனால் பா.ஜனதா கட்சியின் பலம் 105 ஆக உள்ளது. மேலும் அக்கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்ட கூட்டணி அரசு கவிழும் நிலையில் உள்ளது. இதையடுத்து, கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ளும் இறுதி முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா, மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.டி.பி. நாகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். அவருடன் சித்தராமையா 4 மணி நேரம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதுபோல, நேற்று முன்தினம் இரவு சித்தராமையா வீட்டில் வைத்து எம்.டி.பி. நாகராஜுடன் முதல்-மந்திரி குமாரசாமியும் ஆலோசித்தார். மேலும் எம்.டி.பி. நாகராஜ் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக குமாரசாமியும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் நிருபர்களிடம் பேசிய எம்.டி.பி.நாகராஜ், தன்னுடைய ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என்றும், அதிருப்தி எம்.எல்.ஏ.வான சுதாகரையும் சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று காலையில் எம்.டி.பி.நாகராஜ் தனது முடிவில் இருந்து திடீரென்று பின் வாங்கினார்.
அதாவது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்து விட்டு எம்.டி.பி.நாகராஜ் நேற்று காலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டார். முன்னதாக எம்.டி.பி.நாகராஜுடன் பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் நேற்று காலையில் பேசியதாகவும், அதன்பிறகே தனது முடிவில் இருந்து எம்.டி.பி.நாகராஜ் பின் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை அசோக் சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
அதுபோல, நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்களின் கைக்கு சிக்காத சுதாகர் எம்.எல்.ஏ.வும் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்ற எம்.டி.பி.நாகராஜை விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகியோர் தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து, மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. ராஜினாமா செய்துள்ள ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க் ஆகிய 2 பேர் மட்டும் பெங்களூருவில் உள்ளனர். ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கோவாவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், பெங்களூருவில் தங்கியுள்ள ராமலிங்கரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் ராமலிங்கரெட்டியை சமாதானப்படுத்த முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. தனது முடிவு குறித்து இன்று(திங்கட்கிழமை) தெரிவிப்பதாக ராமலிங்கரெட்டி உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் உடல் நலக்குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நாகேந்திரா எம்.எல்.ஏ.வை நேற்று மதியம் முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியதுடன், அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்தனர். நாகேந்திரா எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரை குமாரசாமியும், டி.கே.சிவக்குமாரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது. ஏற்கனவே கடந்த 12-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனால் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பா.ஜனதாவும் திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதி முடிவு செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து நாளை(செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய மறுநாள் (17-ந் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் குறித்து எடியூரப்பா எதுவும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு எலகங்கா அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று காலையில் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததுடன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஓட்டலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் கூறிய எடியூரப்பா, ‘எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகியோர் முறையே மும்பைக்கும், டெல்லிக்கும் சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதனால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்துள்ள குமாரசாமி, நாளை(அதாவது இன்று) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் வலியுறுத்துவோம்‘ என்றார்.
அதே நேரத்தில் கூட்டணி அரசை காப்பாற்றுவது மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆலோசிக்க பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவின் வீட்டுக்கு குமாரசாமி சென்றார். அங்கு அவர், தேவேகவுடாவுடன் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தான் ராஜினாமா செய்திருப்பதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா செய்திருப்பதாகவும், அதனால் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தான் ஈடுபட வேண்டும் என்றும் குமாரசாமியிடம் தேவேகவுடா கூறியதாக தெரிகிறது.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முழு முயற்சியில் ஈடுபடும் படியும், தோல்வி அடைந்தால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படியும் குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் தேவேகவுடா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற முதல்-மந்திரி குமாரசாமி, எம்.டி.பி.நாகராஜ் மும்பைக்கு சென்றிருப்பது மற்றும் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவதற்கு அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற கூட்டணி அரசுக்கு 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால் ராமலிங்கரெட்டியை சமாதானப்படுத்தினால், அவருக்கு ஆதரவாக உள்ள பைரதி பசவராஜ், முனிரத்னா, சோமசேகர் ஆகியோர் தங்களுடைய ராஜினாமாவை வாபஸ் பெறுவார்கள் என்றும், அதுபோல, எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகியோரையும் சமாதானப்படுத்தி விடலாம் எனவும் கூட்டணி தலைவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் சமரச பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகிய 2 பேரும் கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துவிட்டு ஒருவர் மும்பைக்கும், ஒருவர் டெல்லிக்கும் சென்றுவிட்ட சம்பவம் கர்நாடக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் சுதாகரும் டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. 2 எம்.எல்.ஏ.க்களால் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த கூட்டணி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே எம்.டி.பி.நாகராஜ், மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர். இதில் எம்.டி.பி.நாகராஜ் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளோம். சுதாகர் எம்.எல்.ஏ. டெல்லி சென்றுள்ளார். அவர் விரைவில் எங்களுடன் வந்து இணைவார். பதவி விலகியவர்களில் 4, 5 பேர் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக தகவல் வெளியானது. அதில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எக்காரணம் கொண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற மாட்டோம்“ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 15-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
இதனால் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் சிக்கலில் சிக்கி உள்ளனர். மேலும் கூட்டணி அரசு கவிழுமா?, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று அரசு தப்புமா? என்று கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story