நாடாளுமன்றத்தில் ‘அம்பானி, அதானி’ பற்றிய பேச்சால் அமளி


நாடாளுமன்றத்தில் ‘அம்பானி, அதானி’ பற்றிய பேச்சால் அமளி
x
தினத்தந்தி 18 July 2019 9:45 PM GMT (Updated: 18 July 2019 9:22 PM GMT)

நாடாளுமன்றத்தில் அம்பானி, அதானி பற்றிய பேச்சால் அமளி ஏற்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் பங்கேற்று பேசினார்.

அப்போது, “பட்ஜெட்டில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். அம்பானிகளும், அதானிகளும்தான் இந்த அரசுக்கு முக்கியம்” என்றார்.

இவ்வாறு அவர் பேசியபோது, பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு சவுகதா ராய், “நான் எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை. நிறுவனங்கள் பெயரைத்தான் குறிப்பிட்டேன்” என்றார். இருப்பினும், பா.ஜனதா கோரிக்கையை ஏற்று, அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் இருக்கையில் இருந்த மீனாட்சி லேகி அறிவித்தார்.

ஆனால், பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ரிஹரி மெதாப் பேசுகையில், “டாடா, பிர்லா பெயர்கள் இதே அவையில் முன்பு கூறப்பட்டன” என்று கூறினார். இதையடுத்து, சபைக்குறிப்புகளை ஆய்வு செய்த பிறகு, சவுகதா ராயின் பேச்சை நீக்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மீனாட்சி லேகி கூறினார்.

Next Story