கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 July 2019 6:45 PM GMT (Updated: 19 July 2019 6:07 PM GMT)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக கோழிக்கோடு, இடுக்கி போன்ற மாவட்டங்களில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. இதைப்போல மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களும் 12 செ.மீ.க்கு அதிகமான மழையை பெற்றுள்ளன.

இதனால் வருகிற 22-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் மேற்படி மாவட்டங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். இடுக்கி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story