உன்னோவ் வழக்கு விசாரணையை உ.பி.யில் இருந்து மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு


உன்னோவ் வழக்கு விசாரணையை உ.பி.யில்  இருந்து மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு
x
தினத்தந்தி 1 Aug 2019 11:19 AM IST (Updated: 1 Aug 2019 11:28 AM IST)
t-max-icont-min-icon

உன்னோவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி இன்று நண்பகல் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக சிறுமி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரிய வந்தது. இதுதொடர்பாக கைது நடவடிக்கை மற்றும் விசாரணை தொடர்கிறது. வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் அண்மையில் சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் சென்ற வழக்கறிஞர் மற்றும் உறவுக்கார பெண் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் சிக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலித்தது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது.  இதற்கு மத்தியில், உன்னோவ் பாலியல் வழக்கின் நிலை பற்றி சிபிஐ அதிகாரி நண்பகல் 12 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் டி மெஹ்தா தலைமை நீதிபதியிடம்,  வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி லக்னோவில் இருப்பதால்  12 மணிக்கு ஆஜர் ஆவது சாத்தியமில்லை எனவும் வழக்கை நாளைக்கு எடுத்துக்கொள்ள முடியுமா? எனவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க முடியாது என்று தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். 

உன்னோவ் பாலியல் விவகாரம் தொடர்பான 4 வழக்குகளை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் மாற்றலாம் எனவும் தெரிகிறது.

Next Story