காஷ்மீரில் குவிக்கப்படும் பாதுகாப்பு படை: கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைப்பு
காஷ்மீருக்கு கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
இந்தியாவில் ஆகஸ்ட் 15-இல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.
இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுகளான 35 ஏ 370 ஆகியவற்றை நீக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதால்தான் ராணுவத்தை குவிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் வீரர்கள் வரத்தொடங்கியுள்ளனர். வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் முக்கிய நுழைவு வெளியேறும் பகுதிகளை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஸ்ரீநகரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
Related Tags :
Next Story