அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு


அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 2 Aug 2019 1:22 PM GMT (Updated: 2 Aug 2019 1:22 PM GMT)

அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பயணிகள், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறும்படி அம்மாநில அரசு  கேட்டுக்கொண்டுள்ளது. அம்மாநில உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிவுரையில், பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுரை வழங்கியுள்ளது.

“அமர்நாத் யாத்திரையை குறிவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளது என்பதை சமீபத்திய உளவுத்துறை உள்ளீடுகள் காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி பள்ளத்தாக்கில் அவர்கள் தங்குவதை உடனடியாகக் குறைத்து, விரைவில் சொந்த ஊர் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது,” என ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்ற உளவுத்துறை தகவல்கள் குறித்து ராணுவம் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் பேசிய சில நிமிடங்களிலேயே உள்துறையின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Next Story