பயங்கரவாத தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது


பயங்கரவாத தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 3 Aug 2019 12:00 AM GMT (Updated: 2 Aug 2019 10:59 PM GMT)

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பயங்கரவாத தடுப்பு மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன்படி தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியும்.

புதுடெல்லி,

தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்க வகை செய்து, பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக 1967-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக, சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) மசோதா-2019-ஐ இயற்றியது.

பயங்கரவாத தடுப்பு மசோதா என அழைக்கப்படுகிற இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் 24-ந் தேதி நிறைவேறியது.

இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிஷன் ரெட்டி நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.

விவாதத்தை தொடங்கி வைத்து பாரதீய ஜனதா எம்.பி. பிரபாத் ஜா பேசுகையில், “பயங்கரவாதம் பாரதீய ஜனதா கட்சிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ விடப்படுகிற சவால் அல்ல, இது நாட்டுக்கு எதிரான சவால்” என குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேசும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஆனால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படும். எனவே இதை தேர்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என குரல் கொடுத்தார்.

இந்த மசோதா மீதான விவாதம், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டிக்கொண்டு மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. எலமரம் கரீம் பேசுகையில், “அரசு பயங்கரவாதத்தை அரசாங்கம் திணிக்கிறது, தங்களோடு கருத்து வேறுபாடு உள்ள தனிநபர்களை அவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியும். இது பெரிய அளவிலான துன்புறுத்தல் மற்றும் அநீதிக்கு வழிநடத்தும்” என சாடினார்.

இந்த மசோதா, என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) எந்த மாநிலத்துக்கும் போகலாம்; தங்கள் விருப்பப்படி, தங்கள் சந்தோஷத்துக்காக எதையும் செய்வதற்கு பகிரங்கமாக உரிமம் வழங்கியது போல அமைந்து விடுகிறது என குறிப்பிட்டார்.

சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் மீது அரசு மென்மையான அணுகுமுறையை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதை ஏன் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சில வருடங்களுக்கு முன்பாக பாரதீய ஜனதா மந்திரி ஒருவர்தான் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

ராஷ்டிரீய ஜனதாதள உறுப்பினர் மனோகர் குமார் ஜா, “மிக எளிதாக ஒருவரை பயங்கரவாதி என அறிவித்து விட முடியும். பயங்கரவாதிகள் என கைது செய்யப்படுகிறவர்கள் 15, 16 வருடங்களுக்கு பிறகே விடுதலை செய்யப்படுகிறார்கள்” என கூறியதுடன், 1947-ம் ஆண்டு சோசலிச தலைவர் ராம்மனோகர் லோகியாவை, அப்போதைய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் சிறையில் அடைத்தபோது, அவரை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நேரு கூறியும், அவர் விடுதலை செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “உங்களுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன. இன்னும் ஏன் உங்களுக்கு கூடுதல் அதிகாரம்?” என கேட்டார்.

தி.மு.க. எம்.பி. பி.வில்சன், இந்த திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர், “பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் வரவேற்புக்குரியது; பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; ஆனால் இந்த திருத்த மசோதா, தவறாக பயன்படுத்தப்படும்” என குறிப்பிட்டார்.

“ஒரு அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டால், அதற்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம், விசாரணை நடத்தி அந்த தீர்ப்பாயம் தீர்ப்பளிக்கும். ஆனால் பயங்கரவாதி என அறிவிக்கப்படுகிற தனிமனிதர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு இல்லை. மத்திய அரசு அதிகாரி நம்பிவிட்டால் ஒருவரை பயங்கரவாதி என அறிவித்து விடலாம்” என கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி. முகமது பயஸ், “இத்தகைய சட்டங்கள் பெரும்பாலும் காஷ்மீரில் தவறாக பயன்படுத்தப்படுகின்றன” என சுட்டிக்காட்டினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி பேசுகையில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எங்கள் கட்சி அரசின் கைகளை வலுப்படுத்தும் ஒவ்வொரு நகர்வையும் ஆதரிக்கும் என்றார்.

நியமன எம்.பி. கே.டி.எஸ். துளசி, திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது கோர்ட்டுகளால் ரத்து செய்யப்படலாம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கப்படலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா மசோதாவை ஆதரித்து பேசினார். திருத்த மசோதாவில் எந்த தவறையும் தாங்கள் பார்க்கவில்லை என்றார்.

இந்திய கம்யூ. எம்.பி. பினோய் விஸ்வம், என்.ஐ.ஏ., சர்வ வல்லமை படைத்ததாக ஆக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, மசோதாவை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்தார்.

விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருத்த மசோதாவில் 4 அடுக்கு ஆய்வுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் நடைபெறாது.

தனிநபர்களை பயங்கரவாதிகள் என அறிவிப்பது தேவையான ஒன்றுதான். ஏனென்றால் ஒரு அமைப்பை தடை செய்த உடன் அவர்கள் வேறு அமைப்புகளை நிறுவி நடத்த தொடங்கி விடுகிறார்கள்.

தனிநபர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் அல்லது பங்கெடுத்தால், பயங்கரவாத செயல் புரிய தயாரானால் அல்லது பயங்கரவாதத்தை ஊக்குவித்தால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்படுவார்கள்.

பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. பயங்கரவாதிகள் மனித நேயத்துக்கு எதிரானவர்கள். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான கடும் சட்டங்களுக்கு எல்லா கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 85 ஓட்டுகளும், எதிராக 104 ஓட்டுகளும் விழுந்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது அதை ஆதரித்து 147 பேர் ஓட்டு போட்டனர். எதிராக 42 பேர் மட்டுமே ஓட்டு அளித்தனர். பெரும்பான்மையோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா எளிதாக நிறைவேறியது.

இனி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். ஓரிரு நாளில் அவர் ஒப்புதல் அளித்ததும், அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும். அதையடுத்து தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தம் அமலுக்கு வரும்.

இதன்கீழ், 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத், பதான்கோட் விமானப்படை தள தாக்குதலின் பின்னணியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் மசூத் அசார் ஆகியோர் முதன் முதலாக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story