குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க நிபந்தனைகள் கூடாது: இந்தியா வலியுறுத்தல்


குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க நிபந்தனைகள் கூடாது:  இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Aug 2019 8:31 AM IST (Updated: 3 Aug 2019 8:31 AM IST)
t-max-icont-min-icon

குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க நிபந்தனைகள் கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது.  இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும்  எனவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
 
 இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட வேண்டிய தூதரக உதவிகளை அனுமதிக்க உள்ளதாக இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான்  கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது. குல்பூஷன் ஜாதவுக்கு இந்திய அதிகாரிகள் தூதரக ரீதியிலான உதவிகளை அளிக்கும்போது, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உடனிருக்க வேண்டுமென இந்தியாவிடம் அந்நாடு நிபந்தனை விதித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.  இந்த நிலையில்,  குல்பூஷண் ஜாதவுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல், தூதரக உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


Next Story