“உங்கள் கடந்த காலத்தைப் பாருங்கள்” - திக் விஜய் சிங்கிற்கு அமித்ஷா பதில்
மக்களவையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது அமித்ஷாவிற்கும் திக் விஜய சிங்கிற்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் பயங்கரவாத(தடுப்பு) மசோதா குறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கிற்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்ற்ப்பட்ட இந்த மசோதாவின் மூலமாக தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெறும்.
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக ப.சிதம்பரம் மற்றும் திக் விஜய் சிங் இருவரும் கேள்வி எழுப்பினர். இந்த சட்டம் தனி நபருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படலாம் என்றனர்.
இதற்கு அமித்ஷா பதிலளித்த போது, “அவசர காலத்தின் போது என்ன நடந்தது? ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன, எதிர் கட்சித்தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 19 மாதங்களுக்கு ஜனநாயகமே இல்லாமல் இருந்தது. இப்பொழுது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக எங்களை குறை சொல்கிறீர்கள். தயவு செய்து உங்கள் கடந்த காலத்தைப் பாருங்கள்.” என்றார்.
மேலும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் திக் விஜய் சிங் கோபத்தில் உள்ளார் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story