மும்பையில் பலத்த மழை, கடல் சீற்றம்; கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை


மும்பையில் பலத்த மழை, கடல் சீற்றம்; கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2019 1:08 PM IST (Updated: 3 Aug 2019 1:08 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பலத்த மழை காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மும்பை, 

மும்பையில் இரவு முழுவதும் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கோரேகோன், கண்டவாலி மற்றும் தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மழையின் காரணமாக மத்திய ரெயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் புறநகர் ரெயில் 15-20 நிமிடம் தாமதமானது. மத்திய ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரியான சுனில் உதசி கூறுகையில், "மழையின் காரணமாக ரெயில்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் கவனமாக இயக்கப்படுகிறது"  என்றார். 

"இன்று மும்பை கடற்கரையில் சுமார் 4.90 மீட்டர் அளவு உயரத்திற்கு அலைகள் அடிக்கும். அதே நேரத்தில்தான் நகரத்தில் மிகவும் கனமழை இருக்கும். கனமழை- கடல்சீற்றம் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதனால் கடற்கரை பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கே.எஸ்.ஹோசாலிக்கர் தெரிவித்துள்ளார்.

 மழை இன்னும் தீவிரமடையும் எனவும், வடக்கு கொங்கன், தானே மற்றும் பால்கர் போன்ற பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஆறு மணிநேரத்திற்கு மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தானே பகுதியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story