ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; முன்னாள் முதல் மந்திரிகளுக்கு வீட்டு காவல்


ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; முன்னாள் முதல் மந்திரிகளுக்கு வீட்டு காவல்
x
தினத்தந்தி 5 Aug 2019 8:12 AM IST (Updated: 5 Aug 2019 8:12 AM IST)
t-max-icont-min-icon

ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த தகவல்களை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் நள்ளிரவில் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்முவில் மொபைல் இன்டர்நெட் சேவைகளும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் உஸ்மன் மஜித் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. எம்.ஒய். தாரிகாமி ஆகியோர் தங்களை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.  எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட கூடும் என்ற நிலையில், முன்னாள் முதல் மந்திரிகளுக்கு வீட்டு காவல் வைக்கப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story