காஷ்மீர் விவகாரம்: சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்க திட்டம்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இந்த தகவல்களை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் சாலையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில், அமித்ஷா அளிக்கும் விளக்கத்தை அடுத்து ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story