சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப்பின் ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளில் தற்போதைய நிலை என்ன? - ‘தந்தி டி.வி.’ ஆய்வு நிலவரம்


சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப்பின் ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளில் தற்போதைய நிலை என்ன? - ‘தந்தி டி.வி.’ ஆய்வு நிலவரம்
x
தினத்தந்தி 8 Aug 2019 5:00 AM IST (Updated: 8 Aug 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து தந்தி டி.வி. ஆய்வு நடத்தியது.

சென்னை,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு மாநிலம் முழுவதும் இடர்பாடுகள் இருந்தபோதிலும், அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக தந்தி டி.வி. ஒரு சிறப்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தது. தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் எஸ்.சலீம் தலைமையிலான இந்த குழுவினர் காஷ்மீர் மக்களை சந்தித்து கருத்து கேட்டு, செய்திகள் சேகரித்து தந்தி டி.வி.யில் ஒளிபரப்பி உள்ளனர்.

இந்த ஆய்வின்படி அங்குள்ள கள நிலவரம் வருமாறு:-

காஷ்மீரின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக விமானம் மூலம் லடாக் சென்ற நிலையில், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் அங்கு வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. அதேபோல விமானம் மூலம் ஸ்ரீநகர், ஜம்முக்கு செல்லலாம். ஆனால் அங்கிருந்து ஊருக்குள் செல்ல வாகனங்கள் எதுவும் கிடையாது.

லடாக்கில் தற்போது கடும் குளிர் நிலவவில்லை. சீதோஷ்ண நிலையும் இயல்பாகவே இருக்கிறது. இதனால் முதற்கட்டமாக லடாக் பகுதியில் சுற்றித்திரிந்து அங்குள்ள பலதரப்பு மக்களை சந்தித்து கருத்துகள் கேட்கப்பட்டது. அதேபோல காஷ்மீர், ஜம்மு மற்றும் கார்கிலில் இருந்து லடாக்குக்கு வரும் மக்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.



 
அந்தவகையில் காஷ்மீர், ஜம்மு, லே-லடாக், கார்கில்-லடாக் என 4 பிரிவுகளாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காஷ்மீரில் துணை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் அரசுக்கு எதிரான தங்களது ஆதரவையோ, எதிர்ப்புகளையோ ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பகிர்வார்கள் என்பதால், இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருக்கிறது.

மிகவும் பதற்றம் நிறைந்த பகுதியாக காஷ்மீர் மாறியிருக்கிறது. இணையதள சேவையை தொடர்ந்து தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 பேர் சேர்ந்து நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. இணையதள-தொலைபேசி சேவை முடங்கியிருப்பதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டிருப்பதால் உச்சக்கட்ட பதற்றம் நிலவும் பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது.

காஷ்மீர் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஊருக்குள் செல்வதற்கு எந்த வாகனங்களும் இல்லை.

ஆனால் ஜம்மு பகுதியானது, இந்துக்கள் அதிகம் வாழும் இடமாகும். எனவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை இப்பகுதியினருக்கு மகிழ்ச்சியையே அளித்துள்ளது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இணையதள சேவை முடங்கியிருக்கிறது. வாகனங்கள் இயக்கப்படாததால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மக்கள் சிரமப்படுகிறார்கள். ஆனாலும் காஷ்மீருடன் ஒப்பிடுகையில், ஜம்முவில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அங்கு அமைதியே நிலவுகிறது.





 லே லடாக் பகுதி மக்கள் வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.


அடுத்ததாக லே லடாக் பகுதி. லடாக்கின் தலைநகரம் போல செயல்படும் அதிமுக்கியமான பகுதி இந்த லே லடாக் ஆகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இதுநாள் வரையிலும் முக்கியமான பணிகளுக்காக ஜம்முவில் 6 மாதமும், காஷ்மீரில் 6 மாதமும் அலைந்து திரிந்த நிலைமை இனி ஏற்படாது என்று நம்புகிறோம். தற்போது யூனியன் பிரதேசமாக லடாக் மாறியுள்ள நிலையில் பாஸ்போர்ட் பதிவு உள்ளிட்ட எல்லா பணிகளையும் எங்கள் சொந்த பூமியிலேயே எங்களால் மேற்கொள்ள முடியும்.

சிறிய பணிகள் என்றாலும் இங்கிருந்து ஜம்மு அல்லது காஷ்மீர் சென்று உணவு கஷ்டத்திலும், அலைச்சல் உள்ளிட்ட சங்கடத்திலும் சிக்கும் நிலைமை இனி ஏற்படாது. தாமதமான முடிவு என்றாலும் நல்ல முடிவு’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

லே லடாக்கில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல காணப்படுகிறது. சாலையோரங்களில் காய்கறி-பழங்கள் விற்பனை நடக்கிறது. இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்படவில்லை.



 லே லடாக் பகுதியில் சாலையோரம் காய்கறி-பழங்கள் விற்பனையில் பெண்கள் ஈடுபட்டிருந்தபோது எடுத்த படம்.


அதேநேரம் லடாக்கின் இன்னொரு பிரிவான கார்கில், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ளவர்கள் இந்த நடவடிக்கை காரணமாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பெருமளவில் பதற்றம் நிலவுகிறது.

அங்குள்ளவர்கள் கூறும்போது, “சீனா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கும் பகுதி கார்கில். எனவே இந்த நடவடிக்கை குறித்து எங்களிடம் கருத்து கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு முன்னறிவிப்பு கூட கொடுக்கவில்லை. மக்கள் கருத்தை மதிக்காத அரசின் தன்னிச்சையாக போக்கில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு நீக்கப்பட்டிருப்பதால் எங்கள் நிலத்தை இனி வெளிமாநிலத்தார் உள்பட யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. இது ஒருபுறம் கவலை அளிக்கிறது. மேலும் இனி எங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக யூனியன் பிரதேசமான லடாக்குக்கு செல்லவேண்டும். இதை ஏற்கவே முடியாது” என்று கவலை தெரிவித்தனர்.

எனினும் கார்கிலை சேர்ந்த மற்றொரு பிரிவினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். அவர்கள் கூறுகையில், ‘லடாக், சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி. மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கையால் சுற்றுலா மேம்படும். அது உண்மை தான், எங்களுக்கு மகிழ்ச்சியும் கூட’ என்று ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, ‘இது விவசாய பூமி அல்ல. சுற்றுலாதான் இங்கு பிரதானம். சுற்றுலா பயணிகளை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவித்திருப்பதால், அங்குள்ள பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருக்கிறது. லடாக் பகுதி அதிக மலை உள்ள, பனிப்பொழிவான ரம்மியமான சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு வருவதற்கு சுற்றுலா பிரியர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள். எனவே மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயம் நம்பகத்தன்மையை கொடுக்கும். சுற்றுலா மேம்பட்டு, அதிக பயணிகள் இங்கு வருவார்கள். எங்கள் வாழ்க்கைத்தரம் உயரும்’ என்று நம்பிக்கை தெரிவித்தனர்.



 ஜம்முவில் மக்கள் நடமாட்டம் இருக்கும் காட்சி.


லே லடாக் பகுதி புத்த மதத்தினர் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் அங்கு நிலைமை சீராக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு வன்முறை மூளும் அபாயம் நேராது என்றே கருதப்படுகிறது. எல்லா வகையிலும் அரசின் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதால் தற்போது வரை எந்த வன்முறையோ, கலவரமோ ஏற்படவில்லை.

ஒட்டுமொத்தத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு, லடாக் பகுதிகளில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காஷ்மீரில் மட்டும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story