தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு 1½ லட்சம் கன அடியாக அதிகரிப்பு


தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு 1½ லட்சம் கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 4:52 AM IST (Updated: 10 Aug 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மாநிலத்தின் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அவற்றில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று மாலையில் நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே அணையின் 4 மதகுகள் வழியாகவும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி, கபினி அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி என தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

குடகு மாவட்டம் பாகமண்டலா அருகே உள்ள கோரங்காலாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 5 பேர் மண்ணில் புதைந்து மரணம் அடைந்தனர்.

மேலும் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா தோரா என்ற இடத்தில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது விழுந்ததில் 2 பெண்கள் பலியாகினர். மேலும் 8 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 9 பேர் பலி ஆனார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளது.

கர்நாடகத்தில் வெள்ளத்தில் சிக்கிய 1 லட்சத்து 24 ஆயிரத்து 291 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.


Next Story