காஷ்மீரில் சில இடங்களில் மட்டுமே போராட்டம்: உள்துறை அமைச்சகம் விளக்கம்


காஷ்மீரில் சில இடங்களில் மட்டுமே போராட்டம்: உள்துறை அமைச்சகம் விளக்கம்
x
தினத்தந்தி 10 Aug 2019 1:52 PM IST (Updated: 10 Aug 2019 1:52 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சில இடங்களில் மட்டுமே போராட்டம் நடைபெற்றதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு போராட்டங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அமைதியாக மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தினர். மளிகை, மருந்து, காய்கறிக் கடைகள் திறந்திருந்தன. எனினும் செல்போன், இணைய சேவை சீராகவில்லை. தூர்தர்ஷன் உட்பட 3 சேனல்கள் மட்டும் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சில இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது, உள்ளூர் இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், “ ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதியில் சில இடங்களில் மட்டும் போராட்டம் நடைபெற்றன. 20-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கூட்டம் கூடி போராட்டம் நடத்தியது. 10 ஆயிரம் பேர் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது” என்று தெரிவித்துள்ளது. 

Next Story