செப்டம்பர் 5-ந் தேதி அறிமுகம் ஆகிறது: ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம் ‘ஜியோ பைபர்’


செப்டம்பர் 5-ந் தேதி அறிமுகம் ஆகிறது: ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம் ‘ஜியோ பைபர்’
x
தினத்தந்தி 12 Aug 2019 7:41 AM GMT (Updated: 12 Aug 2019 7:45 PM GMT)

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ‘ஜியோ பைபர்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தொலைபேசி, இன்டர்நெட், கேபிள் டி.வி.யில் எண்ணற்ற சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

மும்பை,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:-

ஜியோ நிறுவனம், தொடங்கிய 3 ஆண்டுகளில் சந்தையில் வேகமாக முன்னேறி உள்ளது. 34 கோடி சந்தாதாரர்களுடன் உலகின் 2-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. மாதந்தோறும் 10 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஜியோவின் 3-வது ஆண்டு விழாவையொட்டி, செப்டம்பர் 5-ந் தேதி, ‘ஜியோ பைபர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு 12 மாதங்கள் ஆகிவிடும்.

இதில், தொலைபேசி, இன்டர்நெட், கேபிள் டி.வி. ஆகியவற்றில் ஏராளமான சலுகைகள் உள்ளன. இந்த திட்டப்படி, லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஆயுட்காலம் முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். அகண்ட அலைவரிசை இணையதள வேகம், வினாடிக்கு 100 எம்.பி. முதல் ஒரு ஜி.பி. வரை இருக்கும். இதற்கான மாதாந்திர கட்டணம், திட்டங்களுக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து ரூ.10 ஆயிரம்வரை இருக்கும்.

வளர்ந்த நாடான அமெரிக்காவில், அகண்ட அலைவரிசை இணையத்தின் சராசரி வேகம் வினாடிக்கு 90 எம்.பி. ஆகும். ஆனால், ஜியோ பைபர் திட்டத்தில் குறைந்தபட்ச வேகமே வினாடிக்கு 100 எம்.பி. ஆக இருக்கும். உலகில் ரிலையன்ஸ் நிறுவனம் போட்ட பைபர் கேபிள்களை எடுத்து அளந்தால், இந்த பூமியை 11 தடவை சுற்றி வரலாம்.

மேலும், லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு அளவற்ற சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணம் மாதத்துக்கு ரூ.500 ஆகும். இதன்மூலம், சர்வதேச அழைப்புகளுக்கு அதிக கட்டணம் செலவழித்த காலம் மலை ஏறப்போகிறது.

ஜியோ பைபரின் கட்டணங்கள், தற்போது சந்தையில் உள்ள கட்டணங்களில் ஐந்தில் ஒரு பங்கு முதல் 10-ல் ஒரு பங்குவரை இருக்கும்.

இதுதவிர, ஜியோ பைபர் வரவேற்பு திட்டத்தில், குறிப்பிட்ட சந்தாவை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4கே எச்.டி. டி.வி. அல்லது பர்சனல் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும். 4கே செட்டாப் பாக்சும் இலவசம்.

ஜியோ பைபர் பிரிமீயம் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை தங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளிக்கலாம். அடுத்த ஆண்டில் இருந்து இந்த வசதி அறிமுகம் ஆகிறது. இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ‘எண்ணெய், ரசாயனம் பிரிவில் 20 சதவீத பங்குகளை வாங்குகிறது. இந்த பேரத்துக்கு பிறகு, அராம்கோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வழங்கும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது எரிபொருள் சில்லரை விற்பனையில் 49 சதவீத பங்குகளை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு விற்கிறது. இதன்மூலம் ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும்.

மேலும், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் 10 ஆண்டு காலம் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


Next Story