வெள்ளம் பாதித்த வீட்டின் மேற்கூரையில் படுத்து ஓய்வெடுத்த முதலை; கிராமவாசிகள் அச்சம்


வெள்ளம் பாதித்த வீட்டின் மேற்கூரையில் படுத்து ஓய்வெடுத்த முதலை; கிராமவாசிகள் அச்சம்
x
தினத்தந்தி 12 Aug 2019 9:22 PM IST (Updated: 12 Aug 2019 9:22 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த வீட்டின் மேற்கூரையில் முதலை படுத்து ஓய்வெடுத்தது கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெலகாவி,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. அணைகளில்  இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கர்நாடகாவின் சின்சோலி பகுதியில் அஜித் நகர் என்ற இடத்தில் வெள்ள பாதிப்பினால் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது.  அதன் மேற்கூரை மீது ஆற்றில் இருந்து வெளியே வந்த முதலை ஒன்று படுத்து ஓய்வெடுத்தபடி இருந்துள்ளது.  இதனை அந்த வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர்.  இந்த வீடியோ பரவி கிராமவாசிகள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் பொதுவாக முதலைகள் உணவுக்காக ஆற்றில் இருந்து வெளியே வருவதும், முட்டைகள் இடுவதும் வழக்கம்.

ஆனால், வெள்ள பாதிப்பில் மக்கள் சிக்கி கடந்த 20 நாட்களாக சரியாக தூங்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.  இதனிடையே ஊருக்குள் முதலை புகுந்துள்ளது அவர்களுக்கு கூடுதலாக அச்சம் ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகளும், வெள்ள நீருக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.  ஏனெனில், காட்டில் வசிக்கும் பாம்புகள், முதலைகள் உணவுக்காக நிலப்பரப்பிற்கு வர கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story