பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்தன


பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்தன
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 9:26 PM GMT)

காஷ்மீரில் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே பக்ரீத் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்தன.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் கடந்த ஒரு வாரமாக அமலில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் புனித நாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருவதால், அவர்கள் பண்டிகை கொண்டாடுவதற்கு வசதியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தன. குறிப்பாக மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கும், பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்கும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், அதற்கான வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது.

அதன் பயனாக நேற்று பக்ரீத் பண்டிகையை மாநிலம் முழுவதும் மக்கள் கொண்டாடினார்கள். இதற்காக அருகில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் ஜம்மு பிராந்தியத்தில் மக்களிடம் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.

ஜம்முவில் உள்ள இட்கா மைதானத்தில் பிரதான தொழுகை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அவர்களை தவிர பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து மதத்தினர் பலரும் இந்த தொழுகையில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறினர்.

பண்டிகையை முன்னிட்டு மசூதிகள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தன. மேலும் பேக்கரி, இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் திறந்திருந்தன. அவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் செல்போன் சேவையும் மீண்டும் வழங்கப்பட்டு இருப்பதால் மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்களுக்கு செல்போனில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஜம்மு பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இதைப்போல லடாக்கில் உள்ள மைதானத்தில் காலை 9.30 மணிக்கு சிறப்பு பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் பெருமளவில் இந்த தொழுகையில் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

புத்த மதத்தை சேர்ந்த லடாக் தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஜம்யாங் செரிங்க் நம்கியல் தொழுகை நடைபெற்ற மைதானத்துக்கு வந்து பக்ரீத் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு அவர் நீண்ட நேரம் இருந்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை லடாக் மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். லடாக்கில் உள்ள எல்லா மக்களுக்கும் நான்தான் எம்.பி. எனவேதான் பாகுபாடு பார்க்காமல் நல்லிணக்கத்தோடு இஸ்லாமியர்களின் பக்ரீத் கொண்டாட்டத்தில் பங்கேற்று உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல காஷ்மீர் பகுதியிலும் மக்கள் அமைதியான முறையில் பக்ரீத்தை கொண்டாடினார்கள். ஆனால் அங்கு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. வெறிச்சோடிய சாலைகள், அடைக்கப்பட்டிருந்த வர்த்தக நிறுவனங்கள், வீடுகளிலேயே முடங்கிய மக்கள் என பலத்த கட்டுப்பாடுகள் இருந்ததால் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. எங்கும் மயான அமைதியே காணப்பட்டது. போலீஸ் வாகனங்களின் சைரன் ஒலியும், வான் வழி கண்காணிக்கும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் இரைச்சலும் மட்டுமே இருந்தன.

காஷ்மீர் பகுதியில் வழக்கமாக சிறப்பு தொழுகை நடைபெறும் ஹசரத்பால் மசூதி, டி.ஆர்.சி. மைதானம், சையத் சாகேப் மசூதி போன்றவற்றில் தொழுகைக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைப்போல பல இடங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட மசூதிகளுக்கும் மக்கள் கூட்டமாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. எங்கேயும் அதிக எண்ணிக்கையில் மக்களை கூட அனுமதிக்கவில்லை.

மாநிலத்தில் கடந்த 9-ந் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகரின் பல பகுதிகளில் மக்கள் கூட்டமாக கூடி போராட்டம் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினரின் ரப்பர் குண்டு தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை குண்டுவீச்சில் 10 பேர் காயமடைந்திருந்தனர்.

எனவே நேற்று தொழுகையை தவிர பிற பணிகளுக்காக மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீநகரின் இந்திரா நகரை சேர்ந்த முகமது அஸ்கர் இது குறித்து கூறும்போது, ‘அடுத்த தெருவில் நோயால் வாடி வரும் எனது சகோதரனுக்கு பக்ரீத் வாழ்த்து கூறுவதற்காக செல்வதற்கு கூட பாதுகாப்பு படையினர் விடவில்லை’ என தெரிவித்தார்.

இவ்வாறு காஷ்மீரில் பல இடங்களில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. செல்போன், இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் பக்ரீத் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் அது குறித்த மேலும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதைப்போல அங்கு கைது செய்து ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கும், அங்கேயே சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பக்ரீத் பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல மசூதிகளில் தொழுகையில் பங்கேற்ற மக்களுக்கு பாதுகாப்பு படையினரே இனிப்பும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story