கேரள வெள்ள பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு


கேரள வெள்ள பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 7:57 PM IST (Updated: 13 Aug 2019 8:12 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு 91 பேர் உயிரிழந்து உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது.  இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.  சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

காணாமல் போன 59 பேரில் 51 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 31 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.  வயநாட்டில் 7 பேரும், கோட்டயத்தில் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

இதேபோன்று கடும் மழை பொழிவினால் ரெயில் சேவை பாதிப்படைந்து உள்ளது.  கேரள பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 8ந்தேதி முதல் இன்று வரை கேரள வெள்ள பாதிப்பு சம்பவங்களில் சிக்கி மாநிலம் முழுவதும் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.  34 பேர் காயமடைந்து உள்ளனர். 59 பேரை இன்னும் காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், கேரளாவில் மொத்தம் 11,159 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன.  இவற்றில் வயநாடு பகுதிகளில் அதிகளவில் 5,434 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன.  இதனை தொடர்ந்து மலப்புரம் (1,744) மற்றும் கண்ணூர் (1,605) ஆகிய பகுதிகள் உள்ளன.

இதேபோன்று 1,239 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இவற்றில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 491 பேரை உள்ளடக்கிய 68 ஆயிரத்து 920 குடும்பங்கள் தங்கி உள்ளன என தெரிவித்து உள்ளது.

Next Story