உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் -பிரதமர் மோடி


உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Aug 2019 8:06 AM GMT (Updated: 14 Aug 2019 8:06 AM GMT)

உள்ளூர் மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து கூறியுள்ளார். காஷ்மீர் குறித்த முடிவில் எதிர்ப்புகளும் உள்ளதே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி கூறியதாவது:- “ தயவு செய்து காஷ்மீர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பாருங்கள் குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுய நல குழுக்கள் எதிர்க்கின்றனர். அரசியல் பாகுபடின்றி இந்திய மக்கள் இந்த முடிவை பாராட்டியுள்ளனர். அவசியமானது ஆனால் சாத்தியமற்றது என்று மக்கள்  கருதியவை தற்போது மெய்யாகியுள்ளது.

 370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலி உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள். இனி அவர்களுக்கு  வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில்  உள்ள எனது சகோதர சகோதரிகள் சிறப்பான எதிர்காலத்தை விரும்புகின்றனர்.  ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும், தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை  ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Next Story