சிறந்த போலீஸ்காரர் விருது வாங்கியவர், மறுநாளே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டார்


சிறந்த போலீஸ்காரர் விருது வாங்கியவர், மறுநாளே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டார்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:43 AM GMT (Updated: 2019-08-17T17:47:49+05:30)

தெலுங்கானாவில் உள்ள ஒரு போலீஸ்காரர் கடந்த 15 ந்தேதி சுதந்திர தினத்தன்று சிறந்த கான்ஸ்டபிள் விருதை பெற்றார். மறுநாள் ரூ.17 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பிடிபட்டு தெலுங்கானா காவல்துறைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்  பல்லே திருப்பதி ரெட்டி, அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவரது 'அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை' அங்கீகரிக்க தெலுங்கானா அரசு அவருக்கு 'சிறந்த  கான்ஸ்டபிள்' விருது வழங்கியது.

இந்த விருதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ரெமா ராஜேஸ்வரி முன்னிலையில் அவருக்கு மாநில அமைச்சர் சீனிவாஸ் கவுட்  வழங்கினார்.

ஆனால் ஒரு நாள் கழித்து, கான்ஸ்டபிள் ரெட்டி ஊழல் தடுப்பு பணியகத்தின் (ஏசிபி) வலையில் சிக்கினார். அவர் ஒரு நபரை துன்புறுத்தியது மற்றும் ரூ.17,000 லஞ்சம் வாங்கியதாக சிக்கினார்.

லஞ்சம் வாங்கும் நேரத்தில், கான்ஸ்டபிள் ரெட்டி தெலுங்கானாவின் மஹ்புப்நகர் மாவட்டத்தில் உள்ள ஐ-டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

எம் ரமேஷ் என்ற நபரை ஒரு வருடத்திற்கும் மேலாக துன்புறுத்தியதாகவும், அவரது டிராக்டரை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டி  லஞ்சம் கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சோர்ந்துபோன ரமேஷ், ஏ.சி.பி.யை அணுகி கான்ஸ்டபிள் ரெட்டி மீது புகார் அளித்தார். ஏ.சி.பியின் உதவியுடன், போலீஸ்காரர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரெட்டியை கையும் களவுமாக பிடித்து உள்ளனர்.

கான்ஸ்டபிள் ரெட்டியின் கால்சட்டையின் "பின் பாக்கெட்டில்" இருந்து லஞ்சத் தொகையை ஏசிபி மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story