சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு - வாடிகனுக்கு கடிதம் அனுப்பினார் + "||" + Kerala Nun Appeal removed from the council - sent a letter to the Vatican
சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு - வாடிகனுக்கு கடிதம் அனுப்பினார்
சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி, வாடிகனுக்கு கடிதம் அனுப்பி மேல்முறையீடு செய்தார்.
கொச்சி,
கேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தவர் லூசி கலப்புரா.
இவர், ஜலந்தர் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
இந்த நிலையில், இவர் கவிதைகள் எழுதி வெளியிடுகிறார்; கார் வாங்கி உள்ளார், சபை விதிமுறைகளை மீறி வாழ்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.
இவருக்கு கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்தும், மனம் வருந்தவில்லை; சபை திருப்தி அடைகிற வகையில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி, இந்த மாத தொடக்கத்தில் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவரை மடத்தில் இருந்து திரும்ப அழைத்துச்செல்லுமாறு வயநாட்டில் உள்ள அவரது தாயாருக்கு கடிதமும் எழுதப்பட்டது.
ஆனால் அவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதம் அனுப்பினார். இதை கொச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.