சபரிமலைக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு


சபரிமலைக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு
x
தினத்தந்தி 17 Aug 2019 9:45 PM GMT (Updated: 2019-08-18T02:28:18+05:30)

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவிலுக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகப்புரம் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய மேல்சாந்திகள் நியமிக்கப்படுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான மேல்சாந்திகள் தேர்வு நேற்று காலை 8 மணி அளவில் சன்னிதானத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அதாவது சிறப்பு பூஜைகளுக்கு பின் குலுக்கல் மூலம் தேர்வு நடந்தது.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலா 9 பேரின் பெயர்கள் தனித்தனியாக எழுதப்பட்டு இரண்டு வெள்ளி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. இதற்காக பந்தளம் கொட்டாரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவன் மாதவ் கே.வர்மா சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கான மேல் சாந்தியையும், சிறுமி காஞ்சனா வர்மா மாளிகப்புரத்திற்கான மேல்சாந்தியையும் தேர்வு செய்தனர்.

இதில், மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்த ஏ.கெ.சுதீர் நம்பூதிரி அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாகவும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை சேர்ந்த எம்.எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கெ.சுதீர் நம்பூதிரி திருநாவ நாதா முகுந்தா கோவிலில் மேல்சாந்தியாக உள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகளின் பணிக்காலம் 1 வருடம் ஆகும்.

நடப்பு மண்டல காலம் முதல் அடுத்த மண்டல கால தொடக்கம் வரை மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள். 2019-நவம்பர் மாதம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் நாளில் இருவரும் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்று கொள்வார்கள்.


Next Story