ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் - 300 ஹஜ் பயணிகள் திரும்பினர்


ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் - 300 ஹஜ் பயணிகள் திரும்பினர்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 2019-08-19T03:59:44+05:30)

வன்முறை சம்பவங்கள் காரணமாக, ஸ்ரீநகரில் சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கிடையே, ஹஜ் யாத்திரை சென்றிருந்த 300 பயணிகள், நேற்று காஷ்மீருக்கு திரும்பினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது.

இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 35 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், அதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள் வீசப்பட்டன. மேலும், சில இடங்களில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களில் சிலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை காரணமாக, தலைநகர் ஸ்ரீநகரில் சில குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இத்தகவலை ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார்.

மற்றபடி, சாலைகளில் தனியார் வாகனங்கள் வழக்கம்போல் ஓடின. சில கடைகள் திறந்திருந்தன. பல்வேறு பகுதிகளில் தொலைபேசி சேவை செயல்பட தொடங்கியது.

இதற்கிடையே, சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்றிருந்த சுமார் 300 பயணிகள் நேற்று ஸ்ரீநகருக்கு விமானங்களில் திரும்பினர். அவர்களை வரவேற்க ஒரு பயணிக்கு ஒருவர் வீதம் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஹஜ் பயணிகளும், அவர்களுடைய உறவினர்களும் நகருக்குள் பயணம் செய்ய மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன. அனைவரும் அவரவர் இருப்பிடங்களுக்கு பத்திரமாக சென்றடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஹஜ் பயணிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளிலும் செல்ல சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்ற ராதா குமார், ஹிண்டல் ஹைதர் தியாப்ஜி, விமானப்படை முன்னாள் துணைத்தளபதி கபில் கக், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அசோக் குமார் மேத்தா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமிதாபா பாண்டே, கோபால் பிள்ளை உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

370-வது பிரிவு நீக்கத்தை அப்பட்டமான அரசியல் சட்ட விரோத நடவடிக்கை என்று வர்ணித்துள்ள அவர்கள், அந்த நடவடிக்கையை செல்லாது என்று அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

ஏற்கனவே இதேபோன்ற மனுவில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story