பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு; தலைவர்கள் இரங்கல்


பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு;  தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 19 Aug 2019 8:34 AM GMT (Updated: 2019-08-19T14:04:11+05:30)

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக  உடல் நலக்குறைவின் காரணமாக  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். 

ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 -வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முறை முதல்வராக இருந்து உள்ளார்.

அவரது  மரணம் குறித்த செய்தி அறிந்த அரசியல்வாதிகள் மற்றும் பிற பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகார் முதலமைச்சரும்,  ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார்  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். 

"ஜெகந்நாத் மிஸ்ரா ஒரு பிரபலமான தலைவர் மற்றும் கல்வியாளர் ஆவார். அவர் பீகார் மற்றும் இந்தியாவின் அரசியலுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கி உள்ளார். அவரது மரணம் அரசியல், சமூகம் மற்றும் கல்வித்துறைக்கு  ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்" என கூறி உள்ளார்.

பீகார் சட்டமன்றத்தின் செயல் தலைவர் முகமது ஹாரூன் ரஷீத்தும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

பீகார் சட்டமன்ற சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி, "முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவின் மரணம் தனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு" என்று கூறியதுடன், "பீகார் அரசியலின் பெரிய  தூணை இழந்து விட்டோம்" என்றும் கூறி உள்ளார்.

பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

Next Story