ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு


ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 9:22 AM GMT (Updated: 2019-08-21T14:52:27+05:30)

ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்து விட்டார்.

புதுடெல்லி,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக  ப.சிதம்பரம் இருந்தபோது, 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக  சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ப சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ரமணா முன்பு  விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

மேலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் பரிந்துரைத்தார். ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக முன்ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதியும் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் மீண்டும் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முறையிட்டது. 

ஆனால், பட்டியலிடாத வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி என்.வி ரமணா, இன்று மனுவை விசாரிக்க முடியாது எனவும் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறும் கூறிவிட்டார். இதையடுத்து, மாலை 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story