உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்சார வயரில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு


உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்சார வயரில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 9:30 AM GMT (Updated: 21 Aug 2019 9:30 AM GMT)

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்சார வயரில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் மூவர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. உத்தரகாசி மாவட்டத்தில் 20 வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அம்மாவட்டத்தில் மழை, வெள்ளத்தினால் 12 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இடர்பாடுகளில் சிக்கி பலர் புதையுண்டதாக உள்ளூர் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைவிடாத மழையின் தாக்கத்தால் உயிருக்கும் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வட இந்திய மாநிலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் உள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 ஹெலிபேட்களை மாநில நிர்வாகம் இயக்கி வருகிறது. கடந்தவார இறுதியில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உள்பட 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களில் பெய்த மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் உத்தரகாசி மாவட்டத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80-100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாசி மாவட்டத்தில் மின்சார வயரில் மீது மோதி விபத்தை சந்தித்துள்ளது. அதிலிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 

ஹெலிகாப்டர் ஹெரிடேஜ் ஏவியேஷனை சேர்ந்தது. “ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் விபத்தில் இறந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு பணிக்கு 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது ” என்று மாநில பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.  

Next Story