சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது - இஸ்ரோ


சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது - இஸ்ரோ
x
தினத்தந்தி 21 Aug 2019 10:12 AM GMT (Updated: 21 Aug 2019 10:12 AM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகின் வல்லரசு நாடுகள் கூட இதுவரை ஆராய்ந்து அறிந்திராத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’வின் கனவு ஆகும். அந்த கனவை நனவாக்குவதற்காக உருவாக்கிய விண்கலம், சந்திரயான்-2.

3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டரும், விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற ரோவரும் உண்டு.

கடந்த மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை படிப்படியாக 5 முறை உயர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 14-ந்தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜின் 1,203 வினாடிகள் இயக்கப்பட்டது.

அதையடுத்து சந்திரயான்-2 விண்கலம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இந்த நிலையில், ஏற்கனவே ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தீட்டிய திட்டத்தின்படி, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தின் என்ஜினை 1,738 வினாடிகள் இயக்கி, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை செலுத்தினர். இந்தப்பணி காலை 9.02 மணிக்கு செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை  இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

நிலவுக்கு 114 கி.மீ. அருகேயும், 18 ஆயிரத்து 72 கி.மீ. தொலைவிலும் சந்திரயான்- 2 சுற்றும்.  தொடர்ந்து ஆக., 28 ம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சந்திரயான்-2ன் பாதை இரண்டாவது முறையாகவும், செப்., 1 அன்றும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 

இஸ்ரோ இத்தவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story