லேண்டர் கருவி தரையிறக்கும் முயற்சி: ‘எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு உதவும்’ - நாசா முன்னாள் விண்வெளி வீரர் பாராட்டு


லேண்டர் கருவி தரையிறக்கும் முயற்சி: ‘எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு உதவும்’ - நாசா முன்னாள் விண்வெளி வீரர் பாராட்டு
x
தினத்தந்தி 8 Sept 2019 3:00 AM IST (Updated: 8 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

லேண்டர் கருவி தரையிறக்கும் முயற்சி எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு உதவும் என நாசா முன்னாள் விண்வெளி வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும் நிகழ்ச்சியை பல்வேறு தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தன. இதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜெர்ரி லினெங்கர் என்ற நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் வர்ணனையாளராக இருந்தார்.இந்த திட்டம் பின்னடைவானது குறித்து பின்னர் அவர் பேட்டி அளித்த போது, இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த பின்னடைவால் அதிகம் கவலைப்பட தேவையில்லை. மிக மிக கடினமான பணியைத்தான் இந்தியா முயற்சித்தது. இன்னும் சொல்லப்போனால் லேண்டர் இறங்கி வந்ததுவரை அனைத்தும் திட்டமிட்டபடி தான் நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலவின் மேற்பரப்பை அடையவில்லை’ என்று கூறினார்.இந்த மிகப்பெரிய பணிகளை திரும்பி பார்த்தால் இந்த முயற்சி எதிர்கால திட்டங்களை தொடர மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்று கூறிய ஜெர்ரி லினெங்கர், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாகவும், அடுத்த ஓராண்டுக்கு நிலவு குறித்த மிகுந்த பயனுள்ள தகவல்களை அது வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story