நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்


நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 9 Sept 2019 1:30 AM IST (Updated: 9 Sept 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புவனேசுவரம்,

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்கள் ஓட்டியும், சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டியும் விபத்துக்கள் நேரிடுகின்றன.

இந்த விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் அபராதங்களை பல மடங்கு உயர்த்தி, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் செய்தது.

இதை ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள அரசு அமல்படுத்தி உள்ளது.

அங்கு சம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அசோக் ஜாதவ் என்ற லாரி டிரைவருக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் தன்னோடு இருந்த கிளனரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு அபராதம் ரூ.5 ஆயிரம், அவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், அளவுகடந்து சுமை ஏற்றியதற்காக ரூ.56 ஆயிரம் இப்படி பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தகவலை சம்பல்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரி லலித் மோகன் பெஹேரா வெளியிட்டுள்ளார்.

ஆனால் டிரைவர் அசோக் ஜாதவ் உடனே அபராதம் முழுவதையும் செலுத்தி விடவில்லை. அவர் அதிகாரிகளிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக மல்லு கட்டி கடைசியாக ரூ.70 ஆயிரம் செலுத்தி விட்டு லாரியை நகர்த்தி இருக்கிறார்.


Next Story