விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி
விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க இஸ்ரோ ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது.
சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த 1,471 கிலோ எடை கொண்ட லேண்டரை நேற்று முன்தினம் அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் சுமார் 1½ கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பெரிய பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதள பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் விக்ரம் லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்களும் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லேண்டர் நிலவின் நிலப்பகுதியை நோக்கி வேகமாக இறங்கியது. லேண்டரை மெதுவாக தரை இறக்குவதற்காக சமிக்ஞை மூலம் அதன் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்தனர். அப்படி கீழ் நோக்கி வரும் சமயத்தில், நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை.என்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால் மாயமான லேண்டரை பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. விக்ரம் லேண்டர் நிலவின் தரை பகுதியில் விழுந்து கிடப்பதை ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது.
இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் தொலைவை 50 கி.மீட்டராக குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதற்கான பணிகள் துவங்க ஓரிருநாள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான் (நிலவில் அது ஒரு நாள்). எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி படும். லேண்டரில் உள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே 2 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 12 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளி படும்.
ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்படும் நிலையில் இருந்தால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் லேண்டரை கண்டுபிடித்தும், அதனால் எந்த பயனும் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story