ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு
ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370 -ஆவது சட்டப்பிரிவை, கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இம்மாநிலம், ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, அங்கு வன்முறை, கலவரங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல்போன் மற்றும் இணையதள சேவை தற்காலிகமாக தூண்டிக்கப்பட்டிருந்தன. ஜம்மு , ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃபதி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றம் இல்லாத பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடித்தன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
வாகன போக்குவரத்தும் இயல்பு நிலையை எட்டியுள்ளது. தரைவழி தொலைபேசி இணைப்புகள் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மொபைல் போன்களும் குப்வாரா மற்றும் ஹந்த்வாரா ஆகிய இடங்களில் கணிசமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Related Tags :
Next Story