ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்


ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Sept 2019 6:58 AM IST (Updated: 14 Sept 2019 6:58 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.

சண்டிகர், 

கா‌‌ஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரையும் மீட்போம் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்கான சிறப்பு திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதியும், மத்திய மந்திரியுமான வி.கே.சிங்கும் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி அதிரடியானவர். கா‌‌ஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். பாகிஸ்தானால் இதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று தோல்வியடைந்து வருகிறது. இனி ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்தால், அங்கு ஏராளமான தொழில் நிறுவனங்களை நாங்கள் நிறுவுவோம் எனக்கூறிய அதவாலே, இதன் மூலம் பாகிஸ்தானுடன் வர்த்தகம் மேற்கொண்டு அந்த நாட்டின் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு உதவுவோம் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை சேர்ந்த மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Next Story